அப்பா ஓய்வு பெறப் போகிறார் என்பது எங்கள் வீட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாய் ம்னதில் இறங்கியது.
அம்மாவிடம் லேசான நடுக்கம் தெரிந்தது.
நாங்கள் (நான், ஒரு தம்பி, இரு தங்கைகள்) படிப்பு செலவு.. மளிகை, வாடகை, பால், காய்கறி..துணிமணி..
அப்பாவின் சம்பளத்தை இதுவரை யாரும் முழுசாக பார்த்ததில்லை. வாங்கிய கடனுக்குப் பிடித்தம் போக கையில் வருவது வெகு அல்பம்.
குனிந்த தலை நிமிராமல் போய் வரும் அப்பாவுக்கு அத்தனை சாமர்த்தியம் இல்லை.
‘என்ன பண்ணப் போறேனோ.. ‘
அம்மா உபரியாய் தாயார் சன்னிதியை சுற்றி விட்டு வந்தாள். சக்கரத்தாழவாருக்கு எள் முடிச்சு விளக்கு ஏற்றினாள். காட்டழகிய சிங்கரிடம் முறையிட்டாள். கடைசியாய் எப்ப்வம் கடன் கொடுக்கும் குட்டி ஸ்வாமியிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்தாள்.
சாத்தாரவீதியில் குண்டானை அடகு வைத்து வாங்கிய தொகை க்ஷண நேரத்தில் காணாமல் போனது.
அன்றிரவு சமையல் முடிந்ததும் அப்பா அம்மா பேசியதைக் கேட்டேன்.
“ரிடையர் ஆகற அன்னிக்கு வரவங்களுக்கு ஏதாச்சும் சாப்பிடப் போடணும்”
இது அப்பாவின் தழைந்த குரல்.
“அப்படியா.. வெறும் காபி போதாதா”
“இல்லடி.. ஆபிஸ்ல இருந்து கொண்டு வந்து விடுவா.. வெறும அனுப்பினா நல்லா இருக்காது”
“சரி.. “
“கதம்பம்.. தயிர் சாதம் அக்கார அடிசில் “ மெனுவையும் சொல்லி விட்டார்.
அம்மாவுக்குள் பீதி சூறாவளியாய் சுற்றிக் கொண்டிருந்தது கண்களில் தெரிந்தது.
அம்மாவின் அடுத்த பதிலை எதிர்பார்க்காமல் அப்பா கெட்டி ஜமக்காளத்தினுள் சுருண்டு மறைந்து விட்டார்.
சாயங்காலம் என்னையும் ஆபிசுக்கு வரச் சொல்லி இருந்தார். பட்டா கொடுத்த கேமிரா என் கையில்
இருக்கையில் அமர்ந்த கோலம்.. சகாக்களுடன்.. அப்புறம் பிரிவு உபசார விழாவில்.
வழக்கத்தை விடவும் இன்னும் குறுகி அமர்ந்திருந்தார். எப்போதும் போல பாராட்டுகள். சால்வை. மாலை.
“இவர்ட்ட நாம கத்துக்க வேண்டிய ஒரு நல்ல விஷயம் இருக்கு.. யூனியன் எப்ப போராட்டம் அறிவிச்சாலும் தவறாம கடைசி வரை கலந்துகிட்ட நல்ல குணம்..”
இடைவெளி விட்டு.. “தோழர் ராகவன்”
“வாழ்க” பல குரல்கள் ஒலித்தன.
அப்பாவுக்கு மட்டும் அல்ல எனக்குள்ளும் ஏதோ அதிர்ந்தது.
கீழ அடையவளைந்தான் தெரு போஸ்ட் ஆபிசில் இருந்து ஊர்வலமாய்க் கிளம்பி “தோழர் ராகவன் “ “வாழ்க” என்று கீழச்சித்திரைவீதி வரை வந்தார்கள். நூறு பேருக்குக் குறையாது.
அம்மா என்ன செய்தாளோ.. எப்படி சமாளித்தாளோ.. அத்தனை பேரும் சாப்பிட்டு வாசல் திண்ணையில் வைத்திருந்த நாலைந்து கவுளி வெற்றிலையும் காலியாகி..
இரண்டு கூடை நிறைய எச்சில் இலைகள். காபி கப்புகள்.
ஆறு சால்வைகளை அம்மா மடித்து வைத்தாள் அப்புறம். தோழர் கண் கலங்கி இன்னமும் மைக் ஒலியிலிருந்து மீளாமல் திண்ணையில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.
தற்செயலாய் அம்மாவின் கழுத்தைப் பார்த்தேன். கட்டக் கடைசியாய் இருந்த இரண்டு பவுன் செயின் காணாமல் போயிருந்தது. உள்ளே பூட்டப்படாத பெட்டியினுள் சாக்லேட் டப்பாவில் அடகுக் கடை ரசீது அப்புறம் பார்க்க நேரிட்டது.
“அம்மா”
“என்னடா”
பசங்கள் நாலு பேரும் சுற்றி நின்றோம்.
“தோழி லட்சுமி”
“வாழ்க”
அம்மாவின் அந்தச் சிரிப்புக்கு எந்த நகைக் கடையை வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம். தப்பே இல்லை!
23 comments:
அந்த கடைசீ டயலாக் சூப்ப....ர்.....ர்..........ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
யதார்த்தக் கதை!! எங்கள் வீட்டில் படிப்புச் செலவுக்கு அடிக்கடி ஒரு செயின் கோபரேடிவ் பாங்குக்கு போய்வரும்!!
கதையை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
அனைவரும் சிரித்தனர் என நீங்க முடித்தாலும் படித்து முடிக்கும் போது மனதை பிசைகிறது
அப்பாவின் நேர்மை... அம்மாவின் பாசம்... யதார்த்தமாக வெளிப்பட்டிருக்கிறது. அம்மாவின் புன்னகைக்கு விலைமதிப்பில்லை என்று முடித்த விதம் அருமை...
Middle class story supper
எந்தப் புயலிலும் சாயாத எந்த விலைக்கும் படியாத
இதுபோன்ற சீலர்கள் இன்ன்மும் இருக்கத்தான் செய்கிறார்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
த.ம 1
கடைசிவரிகள்.
நகைச்சுவை தான்.
ஆனால் கலங்க வைத்தன.
எத்தனை அம்மாக்கள் இப்படி இருக்கிறார்கள்! மனதைத் தொட்டது சார்.....
தோழருக்கும் தோழிக்கும் வாழ்த்துக்கள். மனம் கனமானது.
உங்களோட கடைசி ட்விஸ்ட்டு.... உங்க ஸ்டைல் சார்! யாரும் அடிச்சுக்கமுடியாது. :-)
//அம்மாவின் அந்தச் சிரிப்புக்கு எந்த நகைக் கடையை வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம். தப்பே இல்லை!//
மனதைப் பிசைந்தாலும் இந்த வரிகள் மொத்தக் கதையையும் கொள்ளை கொண்டு விட்டது.அருமையான பகிர்வு
//“தோழி லட்சுமி”
“வாழ்க”
அம்மாவின் அந்தச் சிரிப்புக்கு எந்த நகைக் கடையை வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம். தப்பே இல்லை!// ;)))))
வரட்டு கெளரவத்திற்காக இதுபோலெல்லாம் செய்யத்தான் வேண்டியுள்ளது.
வெகு அருமையான கதை.
மிகவும் யதார்த்தமானது.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நேற்று 24.11.2011 மாலை, நாம் இருவரும் ஒருவரின் ஓய்வுபெறும் வழியனுப்புவிழாவில் சந்தித்தோம். எனக்கு அப்போதே தெரியும். நாளை அது சம்பந்தமாக ஒரு கதை தங்களிடமிருந்து கட்டாயம் வரும் என்று. அது போலவே வந்து விட்டதே!;)))))
தமிழ்மணம்: 2
உடான்ஸ் : 4
இண்ட்லி: 4
அன்புடன் vgk
what a story! பிரமாதம். இந்தக் கதையை மறக்க ரொம்ப நாளாகும்.
இந்தமாதிரி கணவனை அனுசரித்துப் போகும் மனைவி அமைவதால்தான் பலருடைய குடும்ப சக்கரம் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. சாமர்த்தியம் இல்லாதவர்கள்தான் நல்லவர்களாக இருக்க முடியுமா.?நிறைய குடும்பங்களில் ந்டக்கும் ஒரு யதார்த்தக் கதை. பாராட்டுகள்.
மனங் கொள்ளை போன கதை.கை குடுங்க ரிஷபன்.
தோழர் கண் கலங்கி இன்னமும் மைக் ஒலியிலிருந்து மீளாமல் திண்ணையில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.
தற்செயலாய் அம்மாவின் கழுத்தைப் பார்த்தேன். கட்டக் கடைசியாய் இருந்த இரண்டு பவுன் செயின் காணாமல் போயிருந்தது. உள்ளே பூட்டப்படாத பெட்டியினுள் சாக்லேட் டப்பாவில் அடகுக் கடை ரசீது அப்புறம் பார்க்க நேரிட்டது.
“அம்மா”
“என்னடா”
பசங்கள் நாலு பேரும் சுற்றி நின்றோம்.
“தோழி லட்சுமி”
“வாழ்க”
அம்மாவின் அந்தச் சிரிப்புக்கு எந்த நகைக் கடையை வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம். தப்பே இல்லை!//
பொன்னகை இழந்தும் அம்மா புன்னகைக்க முடிகிறதே... வாழ்க்கைத் தோழருக்கும், வளர்ந்த பிள்ளைகளுக்காகவும்! அம்மா அம்மாதான்!!
மனதை தொட்ட கதை.
கடைசி வரிகள் அருமை. அம்மாக்கள் எல்லாருமே இப்படித்தான்.
நல்லதோர் இல்லறத்தின் இலக்கணமாய் அம்மாவின் புரிதலுணர்வும், அப்பா அம்மாவின் மேல் வைத்த நம்பிக்கையும் அம்மாவைப் பெருமைப்படுத்தும் குழந்தைகளின் பாசமும் மனம் நெகிழ்த்துகின்றன. பாராட்டுகள் ரிஷபன் சார்.
ரிஷபன் அவர்களே! தொழமை உணர்வின் உன்னதம் தெரித்து விழுந்துள்ளது.வாழ்த்துக்கள் ---காஸ்யபன்
வை.கோபாலகிருஷ்ணன் said...
//நேற்று 24.11.2011 மாலை, நாம் இருவரும் ஒருவரின் ஓய்வுபெறும் வழியனுப்புவிழாவில் சந்தித்தோம். எனக்கு அப்போதே தெரியும். நாளை அது சம்பந்தமாக ஒரு கதை தங்களிடமிருந்து கட்டாயம் வரும் என்று. அது போலவே வந்து விட்டதே!;)))))//
சின்ன சின்ன சம்பவங்களையும் இப்படி சுவாரஸ்யமான கதையாக்கும் உங்கள் திறமை, என்னைப் பொறாமைப் பட வைக்கிறது. உங்கள் ஒவ்வொரு கதையும் மனதைப் பிசைகிற மாதிரியே இருக்கும். உங்கள் எல்லாக் கதைகளையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே... ப்ளீஸ்
நாட்டு சூழலினால் குடும்ப சூழல் தடம் பிரண்ட போது என் அம்மாவின் நகை ஒவ்வொன்றாக அடவுக் கடை சென்றது இன்னமும் ஞாபகம் இருக்குது. எங்கள் அப்பா வருடம் முழுதுமே வரும் எல்லோருக்கும் சாப்பாடு போட்டுத் தான் அனுப்புவார். அதனால் அடகுக் கடைக்கு நகை போன வேகம் அதிகம்.
அருமை ரிஷபன்...ரொம்ப எதார்த்தம்
கலக்கல் சார்!
அனைத்து கதைகளையும் படித்து விட்டு வருகிறேன்.
Post a Comment