November 26, 2011

குட்டி நாய்


அலுவலக வாசலில் பஸ்ஸை விட்டு இறங்கியபோது மழை விட்டபின்னும் மழை!

வழக்கம் போல குடை எடுத்துப் போகவில்லை.

“வரீங்களா” என்று கேட்ட நல்ல உள்ளத்தைப் பார்த்து புன்சிரித்து தூறலை மேலே வாங்கி நடந்தேன்.. இல்லை.. நின்று விட்டேன்.

நாலடி முன்னால் அந்த நாய்க்குட்டிகள். கறுப்பு, பிரவுன், வெள்ளை என்று எல்லா காம்பினேஷனிலும்.

மொத்தம் ஐந்து. மழையில் ‘ஙீ’ என்று குரல் கொடுத்துக் கொண்டு தடதடவென இறங்கிப் போகும் எங்களைப் பார்த்து மிரண்டு போயிருந்தன.

காலை ஒன்பது மணி மீட்டிங்.. கைவசம் பெண்டிங் வேலைகள் என்னை உள்ளே மானசீகக் கயிறு போட்டு இழுக்க போய் விட்டேன்.

பத்தரை மணிக்கு ஸ்ரீதர் ‘இளநி’ குடிக்க வரியா என்று ஆசை காட்ட வெளியே வந்தோம்.

மழை விட்டிருந்தது. இளநீர்க்கார பெண்மணி எப்போதும் போல நிறைய நீர் வைத்திருந்த இளநியை தேடிப் பிடித்து ஸ்ரீதரிடம் கொடுத்து விட்டு எனக்கு ஒரே உறிஞ்சலில் காலியாகும் அரை சொட்டு தேங்காயைக் கொடுத்தார்.

“இன்னொன்னு சாப்பிடலாமா” என்று அவன் உற்சாகமாய் கேட்க நான் நாலு பேருக்கு தொகையல் அரைக்கும் அளவுக்கு கை நிறைய கிடைத்த தேங்காயை பசக் பசக்கென்று மென்று கொண்டிருந்தேன்.

அப்போதுதான் ஒரு நாய்க் குட்டி ஓடிவந்தது. தேங்காய் சாப்பிடுமா என்கிற சந்தேகத்துடன் நான் பார்க்க.. இள்நீர் சொன்னார்.

“டீதான் தர முடியுது.. யாரோ கொண்டு வந்து இங்கே விட்டுட்டு போயிட்டாங்க”

அட.. ஆமாம்ல. குட்டிக்கு எப்படி தேங்காய் தர முடியும்..

“அஞ்சு குட்டிங்க”

இளநீருக்கு பணம் கொடுத்து விட்டு கிளம்பி விட்டோம். மறுநாள் மூன்று குட்டிகள் கண்ணில் பட்டன.

“நேத்தே ஒண்ணு செத்துப் போச்சு.. குளிர்ல விரைச்சு. இன்னிக்கு காலைல ஒண்ணு” என்றார் இள்நீர்.

ஹா. மனசுக்குள் ஒரு மளுக் கேட்டது.

அடுத்த இரு நாட்களில் ஒரே ஒரு கறுப்பு நாய்க்குட்டி மட்டும் மிச்சம். தனியே அது எங்கள் பாதையைத் தவிர்த்து இடைவெளிகளில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

யார் பெற்ற குட்டிகளோ.. அம்மா என்ன ஆனாளோ.. கூடப் பிறந்தவர்களும் போயாச்சு. இன்று அது தனி மரம்.

வாழ்க்கை அதன் மேல் அழுத்தமாய் எழுதப்பட்டிருக்கிறது.

இலக்கின்றி அதன் விட்டேத்தியான நடையைப் பார்த்துக் கொண்டிருந்தேன் கொஞ்ச நேரம்.

சில நேரங்களில் சுலபமாய் மூடு அவுட் ஆகமுடிகிறது எனக்கும்.




17 comments:

Yaathoramani.blogspot.com said...

எதுவும் செயய முடியாத சூழலும்
கண்டு கொள்ளமல் இருக்க முடியாத மனமும்
பல சம்யம் இப்படித்தான் நமமை
சங்கடப்படுத்திப் போகிறது
அருமையான பதிவுத.ம 1

ராமலக்ஷ்மி said...

/இன்று அது தனி மரம்.

வாழ்க்கை அதன் மேல் அழுத்தமாய் எழுதப்பட்டிருக்கிறது./

சோகம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட:)

Sharmmi Jeganmogan said...

எப்புடி ஐயா, இப்புடி மனதை கனக்க வைக்கிறீர்? இப்படியான என் கை மீறிய நிகழ்வுகளில் மனம் வலிப்பது இப்போதெல்லம் சகஜமாகிவிட்டது.

நல்ல பதிவு.

வெங்கட் நாகராஜ் said...

பல இடங்களில் இப்படித்தான் ஒன்றுமே செய்ய முடியாமல் போனபின்பு வருத்தம் மனதில் அப்படியே படிந்து விடுகிறது.....

பார்க்கும் எல்லாவற்றையும் அழகிய பதிவாக்க உங்களுக்கு நிகர் நீங்களே..... நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய...

RVS said...

நாயாய் இருந்தாலும் தனிமரமாக நின்ற அந்த குட்டியை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. டச்சிங்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மழை விட்டிருந்தது. இளநீர்க்கார பெண்மணி எப்போதும் போல நிறைய நீர் வைத்திருந்த இளநியை தேடிப் பிடித்து ஸ்ரீதரிடம் கொடுத்து விட்டு எனக்கு ஒரே உறிஞ்சலில் காலியாகும் அரை சொட்டு தேங்காயைக் கொடுத்தார்.

உமக்கு குசும்பு போகாதய்யா..ஒரு வேளை அந்த இளநீர்க் காரி அந்த ஸ்ரீதரின் தங்கையாக கூட இருக்கலாம், அல்லவா?

raji said...

//வாழ்க்கை அதன் மேல் அழுத்தமாய் எழுதப்பட்டிருக்கிறது.//

ஆழமாய் இறங்கும் வார்த்தைகள்.

இதே போன்று நாய்க்குட்டிகளையும் அதன் தாயையும் பார்க்க நேர்ந்த போது தான் எனக்கு என் பதிவின் "தாய் உயிர்" தோன்றியது.

அப்பாதுரை said...

circle of strife :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 4
உடான்ஸ் 4
இன்ட்லி 4

அந்தக் குட்டி நாய் பாவம். தாயையும் சகோதர சகோதரிகளையும் இழந்து தனி மரமாய்....... தங்கள் கண்ணில் பட்டு இன்று பதிவாகி எங்கள் மனதிலும் இடம் பெற்று விட்டது. vgk

இராஜராஜேஸ்வரி said...

இலக்கின்றி அதன் விட்டேத்தியான நடையைப் பார்த்துக் கொண்டிருந்தேன் கொஞ்ச நேரம்./

சுலப்மாக மூட் அவுட் செய்து விட்டது "குட்டி நாய்"

நிலாமகள் said...

எப்போதும் போல நிறைய நீர் வைத்திருந்த இளநியை தேடிப் பிடித்து ஸ்ரீதரிடம் கொடுத்து விட்டு எனக்கு ஒரே உறிஞ்சலில் காலியாகும் அரை சொட்டு தேங்காயைக் கொடுத்தார்.


“இன்னொன்னு சாப்பிடலாமா” என்று அவன் உற்சாகமாய் கேட்க நான் நாலு பேருக்கு தொகையல் அரைக்கும் அளவுக்கு கை நிறைய கிடைத்த தேங்காயை பசக் பசக்கென்று மென்று கொண்டிருந்தேன்.//

ப‌க‌டிக்குள் ஒளிந்திருந்த‌ ஆத‌ங்க‌ம் வாசிப்போரையும் அடைந்த‌து.

இள‌நீர்க்கார‌ம்மாவை 'இள்நீர்' சொன்னார் என்று குறித்திருந்த‌து உயிர்ப்பை கூட்டிய‌து. 'இல்நீர்'ஆக‌ த‌ந்த‌தாலும் அப்பெய‌ர் வெகு பொருத்த‌மே.

ப‌ல‌ச‌ம‌ய‌ம் நாய்க்குட்டியோ நாட்டு ந‌ட‌ப்போ பெருமூச்சுட‌ன் க‌ட‌ந்து போகும்ப‌டியாய்தான்.

மாலதி said...

நல்ல பதிவு.

middleclassmadhavi said...

Survival of the fittest!
//சில நேரங்களில் சுலபமாய் மூடு அவுட் ஆகமுடிகிறது எனக்கும்.//
:-((

துரைடேனியல் said...

Arumai. Manam kanakkirathu.
TM 6.

G.M Balasubramaniam said...

இளநீர்க்காரி அம்மாவுக்கு உங்களிடம் ஏன் இந்த பாரபட்சம்.?காக்கை குருவி எங்கள் ஜாதி நாயும் பூனையும் எங்கள் உறவு, சரிதான். தெருவோரங்களிலும், குப்பைத்தொட்டிகளிலும் பெற்றுப் போட்டு விடப்பட்ட அனாதைக் குழந்தைகள் என் நினைவுக்கு வருகிறார்கள். சென்னையில் உதவும் கரங்கள் கண்டெடுத்த குழந்தைகள் ஒரு விதத்தில் அதிர்ஷ்டசாலிகள். ஒரு காப்பகம் கிடைத்திருக்கிறதே.காரில் சொகுசாய் பிரயாணம் செய்யும் நாய்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மிடில் கிளாஸ் மாதவி கூறியிருப்பதுபோல், இவ்வுலகம் is meant for the fittest to survive. சில பதிவுகள் என்னவெல்லாமோ எண்ண வைக்கிறது.

மாதேவி said...

"கூடப் பிறந்தவர்களும் போயாச்சு. இன்று அது தனி மரம்".

இப்படித்தான் ஆகிறது அய்யோ பாவம் என்றிருக்கும்.