November 07, 2011

விக்கிரமங்கலம்



ரொம்ப வருடம் கழிச்சு முன்பு குடியிருந்த ஊரைப் பார்க்கப் போனேன்.

அலுவலக நண்பர் அதே ஊர்க்காரர்தான். புது வீடு கட்டி புகுவிழா அழைப்பு தந்தார்.

”நிச்சயம் வரேன்”

என் பள்ளி வாழ்க்கை ஆரம்பித்தது அங்கேதான்.

அப்பா போஸ்ட் மாஸ்டர். என் ஆரம்ப காலம் - பள்ளிகள் - ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஊரில்..

ஆனாலும் முதல் காதல்.. முதல் முத்தம் போல முதல் வகுப்பு விக்கிரமங்கலம்.

அரியலூர் டூ முட்டுவாஞ்சேரி ரூட்டில் நாகமங்கலம் அடுத்து விக்கிரமங்கலம்.

அப்போது போஸ்ட் ஆபீஸ் பிளஸ் வீடு.. வாசல் பக்கம் அலுவலகம்.. பின்னால் அடுத்த பகுதியில் வீடு..

இதோ.. ஆபீஸ் கம் வீடு இருக்கும் தெரு.. அம்பாப்பூர் சாலை..


தபால் பெட்டி தொங்கும் வீடு. நாங்கள் குடியிருந்த போது எப்படி இருந்ததோ.. அதில் ஒரு ஒட்டடை கூடத் தொலையாமல் அப்படியே..



அருகிலேயே ஒரு பிள்ளையார் கோவில். அவரும் அதே பழைய வீட்டில்.





போஸ்ட் ஆபீஸ் கவுண்டர் கூட அதே..



ஆனால் அலுவலகம் உள்ளே.. கணினிகள்!




இதோ இன்னொரு மேஜையிலும்..



அப்பா ஓய்வு பெற்றபின் இப்போதுதான் அங்கே போகிறார். எதிர் வீடு, பக்கத்து வீடு, தெரு.. என்று அந்த நாள் மனிதர்களின் பெயர்கள், உறவுமுறை எல்லாம் சொல்லி விசாரிக்க, விசாரிக்க அவர்களுக்கு என்ன ஒரு உற்சாகம்.

‘இந்த ஊருக்கு தபால் ஆபீஸ் வந்ததும் முதல் போஸ்ட் மாஸ்டர்..’ என்று இந்தத் தலைமுறை மனிதருக்கு அப்பாவையும் , அவர் மகன் என்று என்னையும் அறிமுகப்படுத்தினார்கள்.

என்னோடு முதல் வகுப்பு படித்த பலரில் எனக்கு நினைவில் இருக்கிற ஒரே தோழன் ராமலிங்கத்தைப் பார்த்தேன்.

‘நீ ராமலிங்கம் தானே..’

‘நீ கண்ணன் தானே’

ஆயிரம் சொல்லுங்கள்.. அபிஷியல் பெயர் சொல்லி அழைக்கும் மனிதரின் மத்தியில் வீட்டுப் பெயர் சொல்லி, இறுக்கக் கட்டிக் கொள்ளும் தோழமை தருகிற
ஆனந்தமே தனிதான்.

சுற்றி நின்றவர்களிடம் ராமலிங்கம் முகமெல்லாம் பூரிப்பாய் சொல்லிக் கொண்டிருந்தான் (ர்).

‘பாருங்க.. இவர் யாருன்னு மத்தவங்களைப் பத்தி கேட்டதுக்கு மத்தியில.. நாங்க ரெண்டு பேரும் பார்த்த உடனே புரிஞ்சுகிட்டோம்.”

இந்த பக்ரீத் மறக்க முடியாத நாளாகிவிட்டது எனக்கும்!





17 comments:

Rekha raghavan said...

//இறுக்கக் கட்டிக் கொள்ளும் தோழமை தருகிற
ஆனந்தமே தனிதான்//

அக்மார்க் உண்மை. உங்களுடன் நானும் கூட வந்த உணர்வை ஏற்படுத்திய பதிவு. அருமை சார்.

வெங்கட் நாகராஜ் said...

நிச்சயம் இது ஒரு சுகமான அனுபவம்தான்... பல ஆண்டுகள் கழித்து நம் ஊர் சென்று இனிய மனிதர்களை, நண்பர்களைப் பார்க்கும்போது கிடைக்கும் இந்த அனுபவம் மறக்கமுடியாதது....

பகிர்ந்தமைக்கு நன்றி.

middleclassmadhavi said...

//அதில் ஒரு ஒட்டடை கூடத் தொலையாமல் அப்படியே..// :-))


மறக்க முடியாத பக்ரீத் அமைந்ததற்கு வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தபால் பெட்டி தொங்கும் வீடு. நாங்கள் குடியிருந்த போது எப்படி இருந்ததோ.. அதில் ஒரு ஒட்டடை கூடத் தொலையாமல் அப்படியே..//

//அருகிலேயே ஒரு பிள்ளையார் கோவில். அவரும் அதே பழைய வீட்டில்.//

உங்களால் மட்டுமே தர முடிந்த அருமையான நகைச்சுவையான வரிகள். பாராட்டுக்கள். vgk

rajamelaiyur said...

ஆயிரம் ஆனாலும் சொந்த ஊர பார்கின்ற சுகமே தனிதான்

மனோ சாமிநாதன் said...

என்னதான் இருந்தாலும் பழைய நினைவலைகளை திரும்பக் கொன்டு வந்து ரசிப்பதும், பழகிய மனிதர்களை மீண்டும் சந்தித்து சிரிப்பதும் நிச்சயமாய் சுகமான அனுபவம்தான்!

பகிர்வுக்கு நன்றி!

ஷைலஜா said...

பள்ளிவாழ்க்கை நினைவுகள் பழகிய ஊர் இவையெல்லாம் மழைத்தூறல் விழுந்த மண்போல வாசமானதுதான்! ரசித்தேன் ரி.

Yaathoramani.blogspot.com said...

பதிவைப் படிக்கிற எங்களுக்கும் சந்தோஷம்
பெருகியது நிஜம்
படங்களும் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

Sharmmi Jeganmogan said...

எனக்கும் ஆசை ஊருக்குப் போய்ப் பார்க்க... ஆனால் முடியலையே. நீ கொடுத்து வச்சவன் கண்ணா...

Philosophy Prabhakaran said...

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...

அந்த பத்தாங்கிளாஸ் மல்லிகாவை பார்த்தீங்களா...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

குடியிருந்த வீட்டில் ஒட்டடை இருந்ததோ என்னவோ ஒரு ஒட்டடை கூடப் பின்னாத அழகிய நட்பின் கொடி உங்கள் மேல் படர்ந்தது படிக்க நெகிழ்வாய்.அப்பாவுக்கும் மனத் தெம்பூட்டும் அற்புதமான நினைவுகிளறல்.

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கிற பால்ய வயசு நண்பர்களையும், வாழ்ந்த பழைய வீட்டையும் பார்க்கும்போது கிடைக்கும் நெகிழ்ச்சியான அனுபவமே அலாதி..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

..ம் அது ஒரு சுகமான அனுபவம் தான்!
கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா?
அப்பா ட்ரான்ஸ்வர் ஆன அடுத்த ஊர் எது என்று கேட்கிறேன்..தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம், ஸார்!

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு நண்பா. //இறுக்கக் கட்டிக்கொண்ட தோழமை தருகிற ஆனந்தமே தனிதான்// எவ்வளவு அழகான வரிகள். வாழ்த்துகள்.

எதுவுமே மாறாமல் இருப்பது கூடுதல் சந்தோஷம். இல்லையா.

கீதமஞ்சரி said...

பழைய ஊரும் வீடும் பழகியவர்களை மறக்காத மனிதர்களும் அற்புதம் என்றால் அந்த உணர்வுகளை அழகாய் சொன்னவிதம் மனம் ஈர்த்தது ரிஷபன் சார்.

G.M Balasubramaniam said...

நீங்கள் கொடுத்து வைத்தவர். நினைவுகளை துணைக்கழைத்து நான் வாழ்ந்த இடங்களைக் காணச்சென்றால் அடையாளங்களே இல்லாமல் மாறி இருந்தது கண்டு மனம் சற்றே வருந்தியது. அவை முன்னேற்றத்துக்கு நாம் தரும் விலையோ. என் இளமைக் கால வாழ்வு சரித்திரமாக மாறிவிட்டது. உள்ளத்தை பிரதிபலிக்கும் உங்கள் எழுத்துரசிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

நிலாமகள் said...

சார்... ரொம்ப‌ நெருங்கிட்டோம் சார்! அந்த‌ முட்டுவாஞ்சேரிதான் எங்க‌ம்மா பிற‌ந்த‌ ஊர்! (வ‌ள‌ர்ந்த‌து வாழ்ந்த‌தெல்லாம் வேற‌)

நீங்க‌ அப்பாவை இந்த‌ த‌ள்ளாத‌ வ‌ய‌தில் ப‌ழைய‌ நினைவுக‌ளுக்கு கெள‌ர‌வ‌மாய் கூட்டிச் சென்ற‌தும் பிரிய‌த்தின் ம‌ற்றொரு விலாச‌ம்தானே.

வீட்டுல‌ கூப்பிட‌ பேரு க‌ண்ண‌னா சார்?
//அதில் ஒரு ஒட்டடை கூடத் தொலையாமல் அப்படியே..// :-))