November 29, 2011

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல


வடக்கு அடையவளைந்தான் வீதி முனீஸ்வரன் கோவில் ரொம்ப பிரசித்தம். மதில் மேல் நள்ளிரவில் முனி ஜல் ஜல் என்று உலா வருவார் என்கிற ரீதியான கதைகள் சின்ன வயசில் எங்களுக்கு பயம் காட்ட உதவின.

பாத்ரூம் போக இச்சை வருமுன்னே ஐந்து நிமிடம் முன்னதாகக் கிளம்பி வீட்டின் பின்புற டாய்லெட்டை (ஓப்பன் யூனிவர்சிட்டி) அடைய வேண்டும். அத்தனை தூ..... ரம்.

ஆறு குடித்தனம் இருந்தோம் அப்போது. வாடகை.. சொன்னால் நம்ப மாட்டீர்கள். வெறும் அஞ்சு போட்டு ஒரே சைபர். அத்திம்பேர், சித்தப்பா, மாமா என்று எல்லாமே எங்கள் வம்சம்.

இதைத்தவிர இரண்டு மாடுகள். வாசலில் சாணி போட்டு வாசல் தெளிக்க உதவியாய். காலையில் யாரேனும் ஒருத்தர் மாட்டை ஓட்டிக் கொண்டு கொள்ளிடம் போய் மூவருமாய்க் குளித்து விட்டு வருவார்கள்.

வரும் வழியில் அகத்திக் கீரை, வாழைப்பழம் எல்லாம் ஆசையாய் மென்று கொண்டே வரும். மாமிகள் (மாமாக்களும்) கோமாதாவைச் சுற்றி வந்து பின்பக்கம் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள்.

ஓட்டிக் கொண்டு வரும் மாமா பையன் அசப்பில் கிருஷ்ணபரமாத்மா மாதிரி தெரிந்தது எங்கள் பிரமைதான். காலப் போக்கில் மாடு சாணியும் கோமியமும் மட்டும் அதிகமாய்க் கறக்க ஆரம்பிக்க அரை டம்ளர் பாலுக்கு ஏன் இத்தனை அவஸ்தை என்று விற்று விட்டார்கள்.

வீட்டை ஒட்டி பிரசன்னா ஸ்கூல். இடைவெளியில் காம்பவுண்டின் முற்றுப் பெறாத சுவர் வழியே வீட்டின் பின் பக்கமாய் சமையலறைக்கு வந்து விடலாம். எண்ணையில் ஏதேனும் பொறிக்கிற வாசனை மூக்கைத் தொடும் தூரத்தில் வகுப்பறை.

"போடா டீச்சர் திட்டுவாங்க"

"ரெண்டு பஜ்ஜி அவங்களுக்கும் கொடும்மா"

கதை பஜ்ஜி பற்றி அல்ல. என் இளமைப் பருவத்தில் சந்தித்த புஜ்ஜி பற்றி.

முதலில் வீட்டை பற்றி ஒரு அறிமுகம். வாசல் கதவு ஒரு கொண்டி போட்டு உள்பக்கம், வெளிப்பக்கம் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திறக்கிற சேப்டியில் இருந்தது.

வலது கைப் பக்கம் சின்ன திண்ணை ஒருவர் மட்டும் படுக்கிற அளவில். இடது கைப்பக்கம் ஐந்தாறு பேர் படுக்கிற பெரிய திண்ணை. அதை ஒட்டி மாடிப் படிக்கட்டு. ஒருவர் மட்டும் ஏறலாம்.

அங்கே இரவில் யாரோ அழும் குரல் கேட்பதாய் கதை சொல்லப்பட்டு படிக்கட்டு முடியும் இடத்தில் படுக்க யாரும் தயாராய் இல்லை. இதற்காகவே எட்டு மணிக்கே ஓடிப் போய் இடம் பிடித்து விடுவோம்.

கடைசியாய் வரும் (பாவம், வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவி விட்டு வருவாள்) என் தங்கை மட்டும் விளக்குமாறு போட்டுக் கொண்டு படுப்பாள். அப்புறம் அறைகள், பெரிய ரேழி, ஹால், மறுபடி ஒரு ரேழி, கிச்சன், இன்னொரு குட்டி கிச்சன் (ம்ம்.. மூச்சிரைக்கிறது) கட்டியவர் நிச்சயம் அந்தகால ராஜா பரம்பரை. இல்லாவிட்டால் கண்டு பிடிக்க முடியாதபடி இத்தனை அறைகளுடன் (மாடியிலும் நான்கு அறைகள்)கட்டி வைப்பாரா.

தஞ்சாவூர் பாணி ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் ஓவியம் ஒன்று ஹாலில் மேலே மாட்டியிருக்கும். மூன்றாவது ரேழியின் சமையல் புகை பட்டு கறுப்படித்த சுவரில் வெள்ளை சாக்பீசில் 'கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல..' தான் முதலில் நான் பார்த்த காதல் பாட்டு.

எங்கள் வீட்டில் நிறைய "கண்ணன்" கள். பெரிய கண்ணன், சின்ன கண்ணன், வடலூர் கண்ணன்.. இதைத் தவிர தெருவில் பாட்டி கண்ணன், லூட்டி கண்ணன், சீயக்காய்ப் பொடி கண்ணன்.. பெயர்ப் பஞ்சம் நிலவிய காலம்!

எல்லா இடங்களிலும் மாடப் பிறைகள். அகல் விளக்கு ஏற்றி வைப்பார்கள் கார்த்திகை நாட்களில்.

ஒரு பிறையில் எட்டாய் மடித்து வைக்கப்பட்ட காகிதம் தற்செயலாய் என் கண்ணில் பட்டு ஆறு வயசுக்கு இத்தனை ஆர்வக் கோளாறு இருக்கக் கூடாது.

காணாமல் போக வீட்டில் நிறைய இடம் இருப்பதை ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அந்தக் காதல் கடிதம் தான் என் வாழ்க்கையில் முதன் முதலில் எழுத்துலகை அறிமுகப் படுத்தியது.

துல்லியமாய் வரிகள் நினைவில் இல்லை. அது காதல் பிரபோசல் என்று மட்டும் புரிந்தது. அத்திம்பேரின் தங்கை மாமாவின் பையனுக்கு எழுதியது. என்ன செய்வது என்று புரியவில்லை.

இரண்டு பேருக்கும் அது போஸ்ட் பாக்ஸா.. நான் தவறுதலாய் அத்து மீறி விட்டேனா.. யோசிக்கும் வயசில்லை.

என் திருட்டு முழியை அம்மா அடையாளம் கண்டு விசாரிக்க உளறிவிட்டேன். லெட்டர் பறிமுதல் ஆனது. அப்புறம் மாமா பையன் யாரையோ கல்யாணம் செய்ய.. எழுதியவள் வேறு இடத்தில் மணமாகிப் போக.. இப்போது அவள் உயிருடனும் இல்லை.

இன்றும் எப்போதாவது ஞாபகம் வந்து அந்த உறுத்தலில் என் தூக்கம் கெட்டுப் போகிறது.

அந்தக் கடிதத்தை எடுத்த இடத்திலேயே வைத்திருக்க வேண்டும்.. இன்று வரை தீராத சந்தேகம்.. அவள் காதல் அவனுக்குத் தெரியுமா?

ஒரு தொலைபேசி அழைப்பில் பதில் தெரிந்து விடும். இததனை வருடம் கழித்து தூங்கிக் கொண்டிருக்கும் பூதத்தை ஏன் எழுப்ப வேண்டும்..








15 comments:

iniyavan said...

என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பில் "அக்கா" என்ற ஒரு கதை உண்டு. அது ஏறக்குறைய இந்த கதை போல் இருக்கும்.

raji said...

வித்தியாசமான கதை.நல்ல நடைக்கு கேட்கவா வேண்டும் உங்கள் பதிவில்!:)

வெங்கட் நாகராஜ் said...

வடக்கு அடையவளஞ்சான், முனீஸ்வரன் கோவில், ஜல் ஜல் ஒலி, பிரசன்னா பள்ளி எல்லாமே இப்பவும் இருக்கே :) நல்ல நினைவுகள்....

உங்கள் கதை சொல்லும் பாணியில் அசந்து போகிறேன் ஒவ்வொரு கதையிலும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

அடடா! ஆறே வயதில் இப்படி ஒரு தெய்வீகக் காதலில் அநியாயமாக குறுக்கிட்டு விட்டீர்களே!

எனக்கே இப்போது மிகவும் வருத்தமாக இருக்கும் போது அவளுக்கும் / அவருக்கும் எப்படி இருந்திருக்குமோ!

அருமையான நடையில் அசத்தலாக ஏதேதோ காதல் கதைகள் சொல்லி என்னையும் எங்கேயோ அழைத்துச் செல்கிறீர்களே!! இப்போதெல்லாம்.

நீங்கள் எழுதும் எந்தக் காதல் கதைகளையும் என்னால் “மறக்க மனம் கூடுதில்லையே!” - அதாவது அது என் கதையாக்கும் - சாரி சாரி நான் எழுதின கதையாக்கும்.

பிரியமுள்ள vgk

தமிழ்மணம்:2 யூடான்ஸ் 3 இண்ட்லி 3

CS. Mohan Kumar said...

புன்னகையும் வருத்தமும் ஒரு சேர வைக்கிற கதைகள் உங்களுடையது. இதுவும் அத்தகையதே

Sharmmi Jeganmogan said...

வெங்கட் நாகராஜ்said...//உங்கள் கதை சொல்லும் பாணியில் அசந்து போகிறேன் ஒவ்வொரு கதையிலும்....//

நானும் வழிமொழிகிறேன்...

ஹேமா said...

சிறுகதையா சொந்தக்கதையான்னு இன்னும் குழப்பமாவே இருக்கு !

ஷைலஜா said...

//அந்தக் காதல் கடிதம் தான் என் வாழ்க்கையில் முதன் முதலில் எழுத்துலகை அறிமுகப் படுத்தியது/////


ரசித்தேன் இங்க:)

அப்பாதுரை said...

சுவாரசியமான கதை. (ஆறு வயசுல படிக்கத் தெரியுமா?)

middleclassmadhavi said...

லயித்துப் படித்தேன்.
ஒரு ஃபோன் காலில் தெரிந்து கொள்ளலாம் தான்! சில விஷயங்களை முடிவு தெரியாமலே இருந்து விட நேர்கிறது!!

vetha (kovaikkavi) said...

நல்ல கதை . வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

கோமதி அரசு said...

ஒரு தொலைபேசி அழைப்பில் பதில் தெரிந்து விடும். இததனை வருடம் கழித்து தூங்கிக் கொண்டிருக்கும் பூதத்தை ஏன் எழுப்ப வேண்டும்..//

வேண்டாம், வேண்டாம் அவள் போய்விட்டாள், அவன் நிம்மதியாக இருக்கட்டும்.

கதை நன்றாக இருக்கிறது.

பார்க்கும் இடம் எல்லாம் கண்ணனை கண்டார்கள் போலும் ஊரார். அதுதான் ஊர் முழுவதும் கண்ணன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இளமைப் பருவத்தில் சந்தித்த புஜ்ஜி பற்றித் திரும்பும் கதை எண்ணையில் விழுந்த பஜ்ஜியாய் தகதகவென ஜொலித்து தூங்கும் பூதத்தை அப்படியே தூங்கட்டும் என விடுவது வரையிலும் மணக்கிறது புஜ்ஜியாய்.

ADHI VENKAT said...

நல்ல கதை..வார்த்தை பிரயோகங்கள் அருமையாக இருந்தன சார்.

பின்புற மதிலிலும், மாடியிலும் முனியின் ஜல் ஜல் சத்தமும் நடமாட்டமும் இருப்பதாக கூறி இரவு 9 மணிக்கு மேல் அந்த பகுதிகளுக்கு அனுமதிக்கவே மாட்டார்கள் புகுந்த வீட்டில்.

நிலாமகள் said...

ஒரு தொலைபேசி அழைப்பில் பதில் தெரிந்து விடும். இததனை வருடம் கழித்து தூங்கிக் கொண்டிருக்கும் பூதத்தை ஏன் எழுப்ப வேண்டும்..//

அறியாப் ப‌ருவ‌த்து த‌வ‌றுக‌ள் ஆற‌ அம‌ர‌ யோசிக்கும் அறியும் ப‌ருவ‌த்தின் நெருட‌ல்க‌ளாய், நிமிண்ட‌ல்க‌ளாய்... ப‌கிர‌ங்க‌ப் ப‌டுத்துவ‌தும் ஒருவித‌ ம‌ன்னிப்புக் கோர‌ல்தான். கால‌ம் க‌ட‌ந்த‌தால் பிராய‌ச்சித்த‌ம் முடியாத‌தாகிற‌து.என‌க்கு 'கேள‌டி க‌ண்ம‌ணி' ப‌ட‌த்துக் குழ‌ந்தை ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து.